Cabinet Decisions (19 Oct 2020) කැබිනට් තීරණ / அமைச்சரவை முடிவுகள்
2020.10.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்:
சுருக்கமாக
01. 2020 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிற்றுறையை முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் உத்தரவு
02. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கான உத்தேச அபிவிருத்தி முன்மொழிவுகளைப் பெறல்
03. உத்தேச நகர அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரச மற்றும் தனியார் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்தல் / கையகப்படுத்தல்
04. மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் அல்டோ பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை இணைக்குமுகமான புரிந்துணர்வு உடன்படிக்கை
05. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கான புதிய கட்டிடத்தொகுதி மற்றும் தேசிய ஒளடதங்கள் தரப் பாதுகாப்பு ஆய்வுகூடம் நிர்மாணித்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள காணியைக் கையகப்படுத்தல்
06. செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தை பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக நிறுவுதல்
07. வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தல்
08. உயிர்ப்பல்வகைமை மற்றும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மரபுவழி அறிவு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயம்
09. ஒருமுறை பயன்படுத்தி அகற்றும் (Single – Use) பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவு முகாமைத்துவம்
10. சிறியளவிலான விவசாய உற்பத்தி பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம் (SAPP) இன் கீழ் இருக்கும் அனைத்து கடன் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை மீண்டும் நிர்ணயித்தல் மற்றும் விவசாயப் பெறுமதிசேர் கருத்திட்ட அபிவிருத்திக்காக பங்குதாரஃ ஊக்குவிப்பு கம்பனிகளுக்கான மானியங்களை விரிவாக்கல் - சிறியளவிலான விவசாய உற்பத்தி பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம்
11. இலங்கை விமானத் தகவல் வலயத்தை முழுமையாக மீள்கட்டமைத்தல்
12. 1997 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க பிணைச் சட்டம் திருத்தம் செய்தல்
13. ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு மெல்பேர்ன் விமான நிலையத்தில் விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்
14. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுத் திருத்தங்கள்
தற்போது காப்புறுதி ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு எனும் பெயரில் அழைக்கப்படும் இலங்கைக் காப்புறுதிச் சபையை உருவாக்குவதற்கும் இலங்கை காப்புறுதி வர்த்தகத்தை அறிவு பூர்வமாகவும் தொலைநோக்குடன் கூடிய தொழில் ரீதியாக கொண்டு செல்வதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள உறுதிப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் உறுதிப்பத்திர உரிமையாளர்கள் ஆகக்கூடியவர்களைப் பாதுகாக்கும் நோக்கமும் பொறுப்பும் இலங்கை காப்புறுதி வர்த்தக அபிவிருத்திக்கும், கண்காணிப்புக்கும், ஒழுங்குபடுத்தல்களுக்கும் ஏற்புடையவாறு முன்னர் இருந்த 1962 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சட்டத்திற்குப் பதிலாக 2000 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிற்றுறையை முறைப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னிருந்த சட்டத்தின் பிரகாரம் 1995.05.15 ஆம் திகதிய 610/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குகளை திருத்தம் செய்வதற்காக புதிய சட்டத்தின் 16 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 112(3) சரத்தின் கீழ் நிதி அமைச்சருக்குள் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2019.04.18 திகதி 2118/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
02. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கான உத்தேச அபிவிருத்தி முன்மொழிவுகளைப் பெறல்
தற்போது பின்பற்றப்பட்டு வரும் பொறிமுறைக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு எடுக்கும் காலத்தைக் கருத்திற் கொண்டு கீழ்வரும் பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்காக நகர அபிவிருத்தி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
• நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகள் முன்மொழியப்பட்ட உத்தேச அபிவிருத்தித் திட்டங்களுக்கமைய தனியார் துறையினரின் முழுமையான பங்களிப்புடனும் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடனும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச பெறுகைக் கோரல் வழிகாட்டல்களுக்கமைய விடுவிப்பதற்காக உத்தேச அபிவிருத்தித் திட்டங்களைப் பெறும் அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்தல்
• அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடனும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் திட்டங்களுக்காக அடையாளங்காணப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக போட்டி முறிக்கோரல் மூலம் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களிடம் உத்தேச அபிவிருத்தித் திட்டத்தைப் பெறல்
• குறித்த உத்தேச அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் உடன்பாட்டுக் குழு மற்றும் ஒவ்வொரு திட்டங்களின் தன்மைக்கேற்ப கருத்திட்டக் குழு நியமித்தல்
• காணிகளின் பெறுமதியை தீர்மானிக்கும் போது அரச பிரதம மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுப் பெறுமதியே அடிப்படையாகக் கொள்ளப்படும்
• அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனும், குறித்த காணித்துண்டுகளை தெரிவு செய்த முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கல்
03. உத்தேச நகர அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரச மற்றும் தனியார் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்தல் / கையகப்படுத்தல்
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்களை மையமாகக் கொண்டு நகர அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இனங்காணப்பட்டுள்ள அரச காணிகள் மற்றும் தனியார் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய 39 அரச காணித்துண்டுகளை அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) உறுப்புரையின் கீழ் விடுவிப்புக் கொடுப்பனவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தவும், தனியாருக்குச் சொந்தமான 05 காணித்துண்டுகள் காணிகளைக் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையகப்படுத்தவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
04. மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் அல்டோ பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை இணைக்குமுகமான புரிந்துணர்வு உடன்படிக்கை
மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் அல்டோ பல்கலைக்கழகத்திற்கும் (Aalto University) இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் இருதரப்பினரின் நிறுவனப் பணியாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களிடையே பங்களிப்பை ஆரம்பித்தல், வசதியளித்தல், கூட்டு ஆய்வு மாநாடுகள் மற்றும் வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் அல்டோ பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கான புதிய கட்டிடத்தொகுதி மற்றும் தேசிய ஒளடதங்கள் தரப் பாதுகாப்பு ஆய்வுகூடம் நிர்மாணித்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள காணியைக் கையகப்படுத்தல்
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உற்பத்தித் தரங்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை மிகவும் முன்னேற்றகரமாக மேற்கொண்டு வருவதுடன், தர ஆய்வுகளை மேற்கொள்வதற்காக போதுமானளவு வசதிகளுடன் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய ஆய்வுகூடமொன்று இல்லாமை அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தல்களை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு தடையாக இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாறே அதிகாரசபையின் பணிகள் மேலும் பரந்துபட்டுள்ளதால்;, புதிதாக ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் கிருல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மில்கோ பிறயிவெட் லிமிட்டட் நிறுவனத்திற்குச் சொந்தமான 13 ஏக்கர் காணியில் 03 ஏக்கர் காணியை தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்குப் பெற்றுக்கொள்வதற்கும், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்க முன்மொழியப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி அமைப்பதற்கும், தேசிய ஒளடதங்கள் தரப் பாதுகாப்பு ஆய்வுகூடம் நிர்மாணிப்பதற்கும் சுகாதார அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தை பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக நிறுவுதல்
2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் வேறான வர்த்தகப் பிரிவாக இயங்குவதற்காக செலசீன தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துடன் இணைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஆனாலும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் செலசினே நிறுவனத்தின் வர்த்தக நோக்கங்கள் வித்தியாசமானவை என்பது குறித்து வெகுசன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக விடயங்களைக் கருத்திற்கொண்டு செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தை பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக நிறுவுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தல்
வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனம், அரசாங்கத்தின் புதிய கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கொள்கைக்கமைவான மூலோபாய ரீதியாக 'ஐந்து வருட கருத்திட்டம்' தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களின் துணித் தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்து உள்ளுர் துணி உற்பத்தியாளர்களை வலையமைப்பாக ஒன்று சேர்த்து புதிய வர்த்தக அணுகுமுறையுடன் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் தொடர்பாக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த விடங்கள் அமைச்சரவையால் கவனம் செலுத்தப்பட்டு போட்டித்தன்மையான விலைமனுக் கோரலுக்கமைய சலுசல நிறுவனத்திலும் அரசாங்க நிறுவனங்களிலும் துணிகளைக் கொள்வனவு செய்யும் போது 15% வீதமான முன்னுரிமை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. உயிர்ப்பல்வகைமை மற்றும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மரபுவழி அறிவு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயம்
உயிர்பல்வகைமைப் பாதுகாப்பு, நிலைபேறான பயன்பாடு மற்றும் அவற்றின் பயன்கள் நியாயமாகவும் நீதியாகவும் பகிர்ந்து செல்வதை நோக்கமாகக் கொண்டு உயிர்ப்பல்வகைமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் 1992 ஆம் ஆண்டு இலங்கை கையொப்பமிட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய உயிர்ப்பல்வகைமையுடன் இணைந்துள்ள கலாச்சாரப் பல்வகைமை, சுதேச மக்களும் அவர்களிடமுள்ள சுதேச அறிவும், அதன் உற்பத்திகள் மற்றும் பயன்பாடுகளுக்காக நடவடிக்கையெடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் நடவடிக்கையெடுப்பதற்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அதற்கமைய சுற்றாடல் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள மரபுவழி அறிவு மற்றும் பயன்பாடு தொடர்பாக தேசிய நிபுணர்களின் வழிகாட்டலில், குறித்த அனைத்துத் தரப்பினர்களின் பங்களிப்புடனும் மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுத் தயாரிக்கப்பட்ட உயிர்ப்பல்வகைமை மற்றும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மரபுவழி அறிவு மற்றும் பயன்பாடு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயம், சுற்றாடல் அமைச்சர் அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
09. ஒருமுறை பயன்படுத்தி அகற்றும் (Single – Use) பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவு முகாமைத்துவம்
இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், 20 மைக்ரோன் இற்குக் குறைவான பொலித்தீன் உற்பத்தி தடை செய்தல், பொலித்தீன்களால் உணவு ஒற்றும் உற்பத்திகளைத் தடை செய்தல், பொலித்தீன் திறந்த நிலப்பரப்பில் எரியூட்டல் தடை செய்தல் போன்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதோடு பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன்களுக்குப் பதிலாக மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கையெடுத்துள்ளது.
பொலித்தீன், பிளாஸ்;ரிக் முகாமைத்துவம் தொடர்பான பங்குதார நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் உடன்பாடுகளுக்கமைய ஒருமுறை பயன்படுத்தி அகற்றும் (Single – Use) பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் கீழ்வரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்திகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் தடை செய்யவும், அதற்குப் பதிலான மாற்று வழிகளை அடையாளங் காண்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளத.
• Poly Ethylene Terephthalate (PET) மற்றும் ; Poly Vinyl Chloride (PVC) பொதிகளில் இரசாயனப் பொருட்களோ கிருமிநாசினிகளைப் பொதியிடல் தடை, மாற்று வழிமுறையாக கண்ணாடி அல்லது வேறு மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொதிகளைப் பயன்படுத்தல்
• 20 மில்லிலீற்றர்/ 20 கிராம்களுக்குக் குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இனால் தயாரிக்கப்பட்ட சிறிய பக்கற்றுக்களைத் தடை செய்தல், (உணவு மற்றும் மருந்துகள் தவிர்ந்த) மற்றும் மாற்று வழிமுறையாக 100 மில்லிலீற்றர் அல்லது 100 கிராம் அல்லது அதற்கு அதிகமான பக்கற்றுக்களைப் பயன்படுத்தல
• பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட காற்று அடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் (Inflatable Toys) தடை செய்தல், (பலூன், பந்து வகைகள் மற்றும் நீரில் மிதக்கும் விளையாட்டுப்பொருட்கள் தவிர்ந்த) மற்றும் அதற்கான மாற்று வழிமுறையாக சுற்றாடல் நேயமிகு ஆரோக்கியமான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தல்
• பிளாஸ்ரிக் காதுத்துடைப்பு (Cotton Bud) தடை செய்தல் (சுகாதாரச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தும் பொருட்கள் தவிர்ந்த) மற்றும் மாற்று வழிமுறையாக உக்கலடையக் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட காதுத் துடைப்பு (Cotton Bud) பயன்படுத்தல்
• அனைத்துவித பிளாஸ்ரிக் உற்பத்திகளின் மீள் உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் சிபார்சு செய்யப்பட்ட பிளாஸ்ரிக் இனை அடையாளங் காணும் வகையில் 1-7 வரையான குறியீடு பொறித்தலை கட்டாயமாக்கல்.
10. சிறியளவிலான விவசாய உற்பத்தி பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம் (SAPP) இன் கீழ் இருக்கும் அனைத்து கடன் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை மீண்டும் நிர்ணயித்தல் மற்றும் விவசாயப் பெறுமதிசேர் கருத்திட்ட அபிவிருத்திக்காக பங்குதாரஃ ஊக்குவிப்பு கம்பனிகளுக்கான மானியங்களை விரிவாக்கல் - சிறியளவிலான விவசாய உற்பத்தி பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம்
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் இலங்கை அரசின் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சிறியளவிலான விவசாய உற்பத்தி பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம் (SAPP) இன் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் கடன் வசதிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கீழ்வரும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய செயற்பாட்டுக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய விவசாய அமைச்சர் அவர்களால் இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கீழ்வரும் விடயங்களுக்கு அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
• சிறியளவிலான பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்துவித கடன்களுக்குமான வருடாந்த வட்டி வீதம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 6.5% வீதமாக திருத்தம் செய்தல்
• விவசாய பெறுமதிசேர் கருத்திட்ட அபிவிருத்தியை மேற்கொள்ளும் பங்குதார / ஊக்குவிப்பு கம்பனிகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 6.5% வீதத்திற்கமைய 100,000 அமெரிக்கன் டொலர்களுக்கு குறைவான தொகைக்கு அமைய இணக்கக் கடன் வசதிகளை வழங்கல்
• விவசாய பெறுமதிசேர் கருத்திட்ட அபிவிருத்தி மேற்கொள்ளும் பங்குதார / ஊக்குவிப்பு கம்பனிகளுக்கான இணக்கக் கடன் தொகை எல்லை 50,000 அமெரிக்கன் டொலர்களிலிருந்த 100,000 டொலர்கள் வரை அதிகரித்தல்
11. இலங்கை விமானத் தகவல் வலயத்தை முழுமையாக மீள்கட்டமைத்தல்
இலங்கை விமானத் தகவல் வலயம் (Colombo Flight Information Region) இலங்கை நிலப்பரப்பைப் போல் 25 மடங்காவதுடன், குறித்த விமானத் தகவல் வலயத்தில் தரமான விமான சேவைகள் வழங்கும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் ஆசியா பசுபிக் வலயத்தில் எதிர்பார்க்கப்படும் இயலளவு கேள்விகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான சேவைகளும் சர்வதேச சிவில் சேவைகள் அமைப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்திற்கமைய விமான போக்குவரத்து சேவைகள், நடபடிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப்பேணுவதும் இலங்கையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதனால், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இலங்கை விமான தகவல் வலயத்தில் தற்போதுள்ள விமானவழிக் கட்டமைப்மை துரிதமாக மீளத் தயாரிக்க வேண்டியதுடன், அது சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 'தங்குதடையின்றிய விமான போக்குவரத்து சேவைக்கொள்கை' இற்கு ஏற்புடையவாறு தயாரிக்கப்பட வேண்டும். அதற்கமைய விமானப் பயணங்களின் இயலளவை அதிகரிப்பதற்கு ஏற்றவகையில் இலங்கை விமானத் தகவல் வலயம் தொடர்பாக ஆய்வுக்கற்கையை மேற்கொண்டு முழுமையான மீள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், குறித்த ஆய்வுக்கற்கைக்காக கூட்டு நிபுணத்துவ ஆலோசனைச் சேவையைப் பெறுவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.
12. 1997 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க பிணைச் சட்டம் திருத்தம் செய்தல்
1997 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க பிணைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்பணம் சமகாலத்திற்கு ஏற்புடையதாக இல்லாததால், குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கு 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. சட்டமூல வரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் அறிவிப்பதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும், நீதி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
13. ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு மெல்பேர்ன் விமான நிலையத்தில் விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்
அவுஸ்திரேலியா விமான நிலையத்தில், ஸ்ரீலங்கன் விமானங்களின் எரிபொருள் கொள்வனவுக்காக வரையறுக்கப்பட்ட சர்வதேச முறிகள் பொறிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் ஒப்பந்தம் 18.47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முழு மதிப்பீட்டுச் செலவுக்கு ஏVitol Aviation BV கம்பனிக்கு வழங்குவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
14. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுத் திருத்தங்கள்
இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பான சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் 2020 செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த திருத்தச் சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்றக் குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் நீதி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக குழுவிவாதத்தின் போது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென இவ் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
• உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் தேங்கியுள்ள அதிகமான வழக்குகளைக் கருத்தில் கொண்டு குறித்த நீதிமன்றங்களில் நீதவான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள்
• தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது மேலெழும் விடயங்களுக்கமைவான சட்டங்கள் மாத்திரம் அவசரச் சட்டங்களாகக் கருதப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள்
• அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசாங்கத்தால் அல்லது கூட்டுத்தாபனங்களால் 50% விழுக்காடு பங்குகள் அல்லது அதற்கு அதிகமான பங்குகளைக் கொண்ட கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் அதிகாரம் கண்காய்வாளர் நாயகம் அவர்களுக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள்
• அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை, அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கான 19 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கல்