01. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 'விசேட வைப்புக் கணக்கினை' பேணுதல் தொடர்பாக கட்டளையிடல்
நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணி கிடைப்பதை அதிகரிக்கும் நோக்கில், 06 மாத காலத்திற்கு வங்கிகளுக்கு ஊடாக நாட்டிற்கு கிடைக்கும் பணத்தை வைப்புச் செய்வதற்காக 'விசேட வைப்புக் கணக்கு' எனும் பெயரில் சமகால வைப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளையிடுவதற்கு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய வழங்கப்பட்ட கட்டளையின் காலவரையறை 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி முடிவடைவதுடன், அதன் கட்டளைக்கமைய இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணியை நாட்டில் பேணுவதற்கு ஏற்புடைய வகையில் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையால் கீழ் காணும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
• கால முடிவின் பின்னர் மீள் புதுப்பித்து பேணப்படும் 'விசேட வைப்புக் கணக்கின்' பொதுத் தவணை வைப்புக்கான வட்டி வீதத்தைச் செலுத்துதல்.
•'விசேட வைப்புக் கணக்கு' கால முடிவின் போதான தவணைக்கான வருமானத்தை இலங்கையிலுள்ள வேறொரு கணக்கிற்கு மாற்றுவதற்கான அனுமதியை வழங்கல்.
• இலங்கையர் ஆனாலும், வெளிநாட்டு நாணய வைப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தகுதியில்லாதவர்களின் (அரச சார்பற்ற நிறுவனங்கள், பிணைக் கம்பனிகள் போன்ற) விசேட வைப்புக் கணக்கின் தவணைக்கான வருமானம், தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளிச் செல்லாத வகையில் இலங்கை ரூபாய்க் கணக்கில் வைப்பிலிடல்
அதற்கமைய, விசேட வைப்புக் கணக்குத் தொடர்பாக 2020.04.08 ஆம் திகதி 2170ஃ04 ஆம் இலக்க 2020.07.01 ஆம் திகதி 2182/32 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட கட்டளைகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் 29 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 7 ஆம் உறுப்புரையின் பிரகாரம் புதிய கட்டளைகளை வெளியிடுவதற்காக குறித்த கட்டளைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சரான மாண்புமிகு பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
02) 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தை (139 ஆம் அதிகாரம்) திருத்தம் செய்தல்
நாட்டைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாட்டிற்காக வேலை செய்யும் கலாச்சாரம்' எனும் தொனிப்பொருளின் கீழ் 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தைத் திருத்தியமைத்து திடீர் விபத்தின் போது ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்காக ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தியமைப்பதற்கு சட்டவாக்கத்தால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் கீழ்வரும் காரணிகளின் அடிப்படையில் மேலும் திருத்தியமைக்கப்பட வேண்டுமென அவதானிக்கப்பட்டுள்ளது.
• ஊழியர் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தின் 42 ஆம் உறுப்புரையின் கீழ் ஊழியர் ஒருவருக்கு ஏற்படும் விபத்தால் தொழில் வழங்குனரால் இழப்பீட்டு ஆணையாளருக்கு இழப்பீட்டுக் கூற்று சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில், தற்போதுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்படும் ரூபா 1000 குற்றப்பணத் தொகையை அதிகரித்தல்
• இழப்பீட்டு அளவுகளை எடுத்துக்காட்டும் ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தின் 04 ஆம் துணை ஆவணத்தை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் கீழ்வருமாறு திருத்தியமைத்தல்
I. தற்போதுள்ள ரூ. 0 தொடக்கம் ரூ.2500 வரையான இழப்பீடு செலுத்துவதற்காக ஏற்புடையதான குறைந்த மாதச் சம்பளம் ரூ. 0 தொடக்கம் ரூ. 10,000 வரை அதிகரித்தல்.
II. தற்போதுள்ள ரூ. 20,001 இற்கு அதிகமான இழப்பீடு செலுத்துவதற்கு ஏற்புடைய உயர்வான மாதாந்தச் சம்பளம் ரூ. 100,000 வரை அதிகரிப்பதற்குத் திருத்தியமைத்தல்.
III. தற்போது ரூ. 181,665 தொடக்கம் ரூ. 550,000 வரை உயிரிழப்பின் போது செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையை (சம்பளத்தின் அடிப்படையில்) ரூ. 1,140,000 தொடக்கம் ரூ. 2,000,000 வரை அதிகரித்தல்.
IV. தற்போது ரூ. 196,083.80 தொடக்கம் ரூ.550,000 வரை செலுத்தப்படும் நிரந்தர உடல் உபாதைக்கு செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகை (சம்பளத்தின் அடிப்படையில்) ரூ. 1,200,000 தொடக்கம் ரூ. 2,000,000 வரை அதிகரித்தல்.
V. தற்போது ரூ.1320 தொடக்கம் ரூ. 5,500 வரை தற்காலிக உடல் உபாதைக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை (அரை மாதச் சம்பளத்தின் அடிப்படையில்) ரூ. 5,000 தொடக்கம் ரூ. 47,500 வரை அதிகரித்தல்.
இழப்பீடு அறவிடும் நடைமுறைகளைத் துரிதப்படுத்துவதற்காக இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பிஸ்கல்ஃபதிவாளர் மூலம் சொத்துக்கள் அரச உடமையாக்கப்பட்டு இழப்பீட்டு அறவீடுகளை மேற்கொள்ளல்
தொழிலாளர் இழப்பீட்டுக் காப்புறுதி முறைமையை புதிதாக அறிமுப்படுத்தல் அதற்கமைய, மேற்குறிப்பிட்ட திருத்தங்களை உள்வாங்கும் வகையில் சட்டமூலமாக்கல் மூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை மேலும் திருத்தியமைப்பதற்காக தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
03) அரச பாடசாலைகளில் இரண்டாம் நிலைக்கல்வியின் தரப்பண்பு விருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையைப் பெறல்
பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வித் துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான அங்கீகாரம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதற்கமைய, கீழ்வரும் துறைகளில் குறித்த நிதியை முதலிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
• இரண்டாம் நிலைக்கல்வி பாடவிதானங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைமையை மறுசீரமைத்தல்
• வசதிகளுடன் கூடிய முழுமையான இரண்டாம் நிலைக்கல்விப் பாடசாலை வலையமைப்பை பிரதேச செயலக மட்டத்தில் விருத்தி செய்தலும் அதற்காக அனைத்து மாணவர்களுக்கும் தரமான இரண்டாம் நிலைக்கல்வி வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல்
• தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல்
• கல்வியியல் கல்லுர்ரிகளை பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்த்துதல்
• ஆசிரியர் சமநிலையைப் பேணுதல் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குதல் மூலம் மாணவர் தேர்ச்சி மட்டத்தை அதிகரித்தல்
'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்குறிப்பிட்ட 400 அமெரிக்க டொலர்களை முதலிடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் 2020-2025 காலப்பகுதியில் கல்வித் துறையிலுள்ள ஏற்புடைய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
04) தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளில் காணித்துண்டுகளை ஒதுக்குதல்
பிராந்திய கைத்தொழில் சேவைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு 10 கருத்திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் 10 பேருக்கு கீழ்காணும் வகையில் காணித்துண்டுகளை ஒதுக்குவதற்கு கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது
• புத்தள கைத்தொழிற் பேட்டையில் 04 கருத்திட்டங்கள்
• லாக்ஷ உயன கைத்தொழிற் பேட்டையில் ஒரு கருத்திட்டமும்
• நாலந்த எல்லாவெல, புத்தளம் கரந்தெனிய மற்றும் படஅத்த போன்ற கைத்தொழில் பேட்டைகளில் ஒரு கருத்திட்டமும்
முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு குறித்த முதலீட்டாளர்களால் 1144 மில்லியன் ரூபாய்கள் முதலிடப்படவுள்ளதுடன், அதன் மூலம் நேரடி தொழில் வாய்ப்புக்கள் 555 உருவாகும்.
அதற்கமைய, குறித்த 10 முதலீட்டாளர்களுக்கு 35 வருடகாலக் குத்தகை அடிப்படையில் காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05) கொவிட் 19 தொற்றின் பின்னர் சுற்றுலாத் துறைக்கு உதவி வழங்கும் மானிய நடவடிக்கைகளை நீடித்தல்
கொவிட் 19 தொற்று நிலைமையால் வாழ்வாதாரம் இழக்கப்பட்ட இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டுனர்கள் மற்றும் சுற்றுலா சாரதிகளுக்கு மானியம் வழங்குவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 186 மில்லிய்ன் ரூபாய்களை குறித்த அதிகாரசபை நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதுடன், குறித்த நிதி சுற்றுலாத்துறை வழிகாட்டிகளுக்கும் சாரதிகளுக்கும் மானியம் வழங்குவதற்காக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மானியங்கள் சுற்றுலாத் துறையிலுள்ள கீழ்வரும் நபர்களுக்கும் வழங்குவதற்காக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
• 2020.08.31 இற்கு முன்னர் கீழ்க்காணும் விண்ணப்பங்களுக்கு, இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் அல்லது வேறு சுற்றுலாத்துறைச் சங்கங்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுற்றுலா சாரதிகள் / சுற்றுலா பேரூந்து சாரதிகள் மற்றும் உதவியாளர்கள்/ டுக் டுக் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சபாரி ஊர்தி சாரதிகளுக்கு ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் ரூ. 15,000 இனைச் செலுத்தல்
• மாகாண சபையால் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டுனர்களுக்காக ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் ரூ. 20,000 இனைச் செலுத்தல்
06) மட்டக்களப்பு பொது நூலகக் கட்டிடத்தொகுதி நிர்மாணித்தல்
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகக் கட்டிடத்தின் தரைமாடி கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த கட்டிட நிர்மாணத்திற்காக தேசிய பெறுகைக் கோரல் கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரை மூலம் குறித்த ஒப்பந்தம் 214.07 மில்லின் ரூபாய்களுக்கு (VAT இல்லாமல்) பொக்ஸ் மார்க்கட்டின் தனியார் கம்பினிக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
07) சாந்ர மொநொக்லோனல் பியூரிபயிட் மற்றும் டிடர்ஜன் ட்ரீட்டட் டிறயிவ் பக்டர் VIII பிறக்ஷன் 200 ஐயூ - 350 ஐயூ வயல்ஸ் வழங்கலுக்கான பெறுகை
2021 ஆண்டுக்கான, ஈமோபீலியா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ) சாந்ர மொநொக்லோனல் பியூரிபயிட் மற்றும் டிடர்ஜன் ட்ரீட்டட் டிறயிவ் பக்டர் VIII பிறக்ஷன் 200 ஐயூ - 350 ஐயூ வயல்ஸ் 85,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகைக் கோரல், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் சிபார்சுக்கமைய சுவிஸ்சர்லாந்து M/s Baxalta GmbH மொத்தச் செலவு மற்றும் பொதி வசதிகள் செலவு உள்ளிட்ட 5.185 அமெரிக்க டொலர் தொகைக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
08) முன் மூடியுள்ள எனொக்ஷபாரின் சோடியம் ஊசி மருந்து 4000 ஐயூ, 0.4 மில்லிலீட்டர் சிரின்ஜர் 160,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
இதய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் முன் மூடியுள்ள எனொக்ஷபாரின் சோடியம் ஊசி மருந்து கொள்வனவுக்கான ஒப்பந்தம் M/s ABC Pharma Services (Pvt) Ltd இற்கு ஒப்படைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கொள்வனவு உத்தரவு 2020 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வழங்குனருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்துக்கு சிரின்ஜர் 160,000 தேவையாயிருப்பதாக பின்னர் தெரியவந்துள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய மீள் கொள்வனவு உத்தரவாக முன் மூடியுள்ள எனொக்ஷபாரின் சோடியம் ஊசி மருந்து 4000 ஐயூ, 0.4 மில்லிலீட்டர் சிரின்ஜர் 160,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகையை ஆரம்ப வழங்குரான M/s ABC Pharma Services (Pvt) Ltd இற்கு மொத்த செலவு 126.96 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
09) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இறக்குமதிப் பொருட்களுக்கான முனையக் கட்டிட நிர்மாணம் - படிமுறை I
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இறக்குமதிப் பொருட்களுக்கான முனையக் கட்டிட நிர்மாணம் - படிமுறை I இற்கான பெறுகைக் கோரல் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பெறுகைக் கோரல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெறுகை ஆட்சேபனை சபையால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளைக் கவனத்தில் கொண்டு, குறித்த ஒப்பந்தம் 2.37 பில்லியன் ரூபாய்களுக்கு வரையறுக்கப்பட்ட நவலோக கன்ஸ்ரக்ஷன் இற்கு வழங்குவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
10) 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்
2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், சட்டவாக்கத்திற்கான அங்கீகாரம் 2020 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவுகள் 2,692 பில்லியன் ரூபாய்களாவதுடன் மூலதனச் செலவு 1,846 பில்லியன்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீட்டு ஒதுக்கீடுகளில் கீழ்வரும் ஒதுக்கீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
• இதற்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலக் கணக்குகள் இரண்டின் மூலமான ஒதுக்கீடுகள்
• அரசியலமைப்பின் 150 ஆவது அரசியலமைப்பின் 3 ஆம் உப அரசியலமைப்பின் பிரகாரம் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட, 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பீடப்பட்ட செலவுகள் தொடர்பான ஒதுக்கீடு
• 2019 ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ள ஆனாலும் கணக்கு வைக்கப்படாத 211 பில்லின் ரூபாய்கள் கணக்கு வைப்பதற்கான ஒதுக்கீடு
அதற்கமைய, 2020 ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலமாக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூல வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்படுவதற்கும், பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றுக்குச் சமர்ப்பிப்பதற்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
11) 2021 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2021 நிதியாண்டுக்காக ஒதுக்கீட்டுச் சட்டமூலம், சட்டமூலமாக்குவதற்கு 2020 செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவுகள் 2,690 பில்லியன் ரூபாய்களாவதுடன் மூலதனச் செலவு 2,216 பில்லியன்களாகவும் மதிப்பிடப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூல வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்படுவதற்கும், பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றுக்குச் சமர்ப்பிப்பதற்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
12) பாடசாலை சீருடைத் துணி கொள்வனவு – 2021
உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடம் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத் துணிக் கொள்வனவுக்கும், அதற்கமைய தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பெறுகைச் செயன்முறை துரிதமாக நிறைவு செய்வதற்கும் 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைச் சீருடைத் துணி குறித்த தரத்திற்கமைய உற்பத்தி செய்து, பகுதியாக்கப்பட்டு, பொதியிடப்பட்டு கோட்டக் கல்விப் பணிமனைகளுக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வான்கார்ட் இன்டர்ஸ்ரீஸ் (தனியார்) கம்பனி, தங்கொட்டுவ வீவிங் மில்ஸ், பிரபா டெக்ஸ் இன்டஸ்ரீஸ், மற்றும் கிரியேடிவ் டெக்ஸ்டயில் (தனியார்) கம்பனிகளுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
13) பாடசாலையில் ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை
முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கைக்கு அமைய அதிபர்கள் செயற்படுவர். அதேபோல் புலமைப்பரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் குறித்த பாடசாலை அதிபர்கள் நடவடிக்கையெடுப்பர்.
மேலும் 37/2008 மற்றும் 33/2009 சுற்றறிக்கைகளுக்கமைய பாடசாலை அதிபர்களின் ஒப்புதலுடன் இடைத் தரய்களுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதற்கமைய இடமாற்றத்தால் வதிவிடம் மாற்றமடைதல், வெளிநாட்டிலிருந்து வருகை தரல், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படல், நீதிமன்ற நீதவான்கள், அரச விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் அரச மருத்துவர்கள், பாடசாலைகளில் மற்றும் கல்வி அமைச்சில் அல்லது அதனுடன் இணைந்த திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் இடைத் தரங்களில் சேர்த்துக் கொள்வதற்கு தகுதியானவர்களாவர்.
அவ்வாறே மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்ட அநீதிகளால் தகுதிவாய்ந்தவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலுள்ள மாணவர்கள் போன்றவர்களும் இடைத் தரங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாவர்.
அவ்வாறு மாணவர்களை உள்வாங்குவதில் விண்ணப்பங்களைக் கவனத்தில் கொண்டு, ஒரு வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கைணை அதிகரிப்பதற்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் முறைகளைத் திருத்தியமைத்து மேலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையை அறிமுகஞ் செய்வதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
14) கடல் அட்டை (Sea Cucumber) மற்றும் மட்டி (Consh Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்தல்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தால் யாழ்குடா நாட்டின் மேற்குக் கடற்கரையில் கடல் அட்டை (Sea Cucumber) மற்றும் மட்டி (Consh Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் குறித்த கடற்கரையில் தற்காலிகமாக வசித்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுகின்றனர்.
குறித்த நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள சில சுழியோடிகள் குறித்த அனுமதியை மீறி இழுவைப்படகு முலம் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களுடன் சட்ட விரோதக் கடத்தல்களில் ஈடுபடுவதாக் தெரிய வந்துள்ளது. அந்நிலைமையால் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய கடல் அட்டை (Sea Cucumber) மற்றும் மட்டி (Consh Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.